குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து மறைமுகமாக அனுப்பத் தொடங்கி உள்ளனர்.
கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும். இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம்.
அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.
இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது. குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]' அல்லது '[xx].search.yahoo.com' என டைப் செய்தாலும், உடனே 89.149.xxx.xxx என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம்.
எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும். உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.
No comments:
Post a Comment